2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் தமது துறைக்கான மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை, முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டி பல்வேறு தொழிற்சங்கத்தினர் இவ்வாரம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் தமது துறை புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை செவ்வாய்க்கிழமை (17) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரஞ்சித் குறிப்பிடுகையில்,நிதியமைச்சரான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கால்நடை வைத்தியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதற்கும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு முன்வைக்கப்படவில்லை.
சேவைத்துறையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவசாயத்துறை, கால்நடை அபிவிருத்தி மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் லால் காந்தவிடம் கலந்துரையாடி பல கோரிக்கைகளை முன்வைத்தோம்.இருப்பினும் அதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை.
வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வளிக்காவிடின் 2027 ஆம் ஆண்டுக்கான எவ்வித அபிவிருத்தி திட்ட நடவடிக்கைகளிலும் பங்குப்பற்ற போவதில்லை. அதேபோல் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மற்றும் அரசியல் தலையீடுகளுடனான கூட்டங்களில் பங்குப்பற்றப்போவதில்லை என்றார்.
மின்சார புதிய சேவை சங்கத்தின் தலைவர் ஜகத் விதானகே தெரிவிக்கையில்,
வரவு செலவுத் திட்டத்தில் மின்சார துறைக்கும், மின்பயனாளர்களுக்கும் எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. மின்னுற்பத்திக்கான பெற்றரி இறக்குமதியாளர்களுக்கு மாத்திரம் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.ஆனால் தற்போது மின்கட்டணம் பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.
இலங்கை அரச சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுனில் கொடிகார குறிப்பிடுகையில்,
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையில் தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு மாத்திரமே நிவாரணமளிக்கப்பட்டுள்ளது. அரச சேவையில் 5 சதவீதமானோருக்கு மாத்திரமே மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.95 சதவீதமானோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த ஒருதலைபட்சமான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோம்.
அனைத்து பல்கலைக்கழக சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் ரங்க மீகொட குறிப்பிடுகையில், பல்கலைக்கழக சேவை கட்டமைப்பில் கள உத்தியோகத்தர்களின் மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை. எமக்கும் மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும்.இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றார்.
முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் போராட்டம்
வரவு செலவுத் திட்டத்தில் தமக்கான கொடுப்பனவு ஏதும் அதிகரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டி முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றைய தினம் பொலன்னறுவை நகரில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். சம்பளத்தையோ அல்லது மேலதிக கொடுப்பனவையோ அதிகரிக்காவிடின் பரவாயில்லை. வாழ்க்கைச் செலவுகளையேனும் குறைக்க வேண்டும். இந்த வரவு செலவுத் திட்டத்தில் வாழ்க்கைச் செலவுகள் ஏதும் குறைவடையவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.