“2027ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கென 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகையில் தமிழ் பிரதேச செயலகங்களுக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதனை வெளிப்படுத்த வேண்டும்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது கோடீஸ்வரன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
“தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரவு- செலவுத் திட்டத்தை அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனமாகவே பார்க்கின்றோம். இந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள மூன்றாவது வரவு செலவுத் திட்டமாக இது இருக்கின்றது. இதில் நல்ல விடயங்கள் பல உள்வாங்கப்பட்டுள்ளன. சில விடயங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விடயத்திலும் நாங்கள் அரசாங்கத்தைப் பாராட்டுகின்றோம். சுகாதாரம்,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பிலும் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், விவசாயம், கால்நடைகள் மற்றும் நீர்ப்பாசனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லையென்றே கூற வேண்டும்.
இந்த நாட்டில் மிக முக்கியமான துறையாக விவசாயம் உள்ளது; அதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கடமையுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில் 4 வீதமே இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் நிலையில், அவர்களின் வாழ்வைக் கேள்விக்குறியதாக்கக் கூடாது. எரிபொருள் விலை உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், தமது உற்பத்திகளைச் சரியான முறையில் விற்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், விவசாயத்திற்கான ஒதுக்கீட்டை அதிகமாகச் செய்ய வேண்டும்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; 458 பில்லியன் ரூபா அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விடயங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்குவதைத் தவிர்த்து, நாட்டின் உற்பத்தியில் முக்கிய பங்களிக்கும் விவசாயத்திற்கு அதிகளவில் நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டித்வா புயல், ஏனைய அனர்த்தங்கள், வளைகுடாவில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை மற்றும் எல்-நினோ தாக்கம் போன்றன இருந்தும், நாட்டின் பொருளாதாரம் சாதகமான சூழ்நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது; இதுபோன்ற நல்ல விடயங்கள் அரசாங்கத்தினால் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மிளகாய், கருவாடு, சீனி போன்ற பொருட்களுக்கான வரியைக் குறைத்துள்ளமை பாராட்டக்குரிய விடயமாகும்.
மேலும், கல்விக்காக இதில் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; கல்வியில் மறுமலர்ச்சிகள் ஏற்பட்டு வருகின்றன. நகர்ப்புறங்களிலிருந்து கிராமப்புறங்களை நோக்கி கல்வி வளர்ச்சி நகர்த்தப்படுகின்றது; இது நல்ல விடயமே. அதேபோன்று, போக்குவரத்து, வீதி அபிவிருத்தி விடயத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகள் குன்றும் குழியுமாக இருக்கின்றன. கடந்த காலங்களில் அங்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை; அந்தப் பிரதேசங்கள் தொடர்பில் பாகுபாடுகள் காணப்பட்டன.
வீதிகள் குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்கள் பயணிக்க முடியாது என்று கூறுகின்றனர். இதனால், பாடசாலை மாணவர்களின் இடைவிலகல்களும் இடம்பெறுகின்றன. நீங்கள் பாதைகளைச் சரியாகத் திருத்தினால், அந்த மாணவர்களின் கல்வி நிலை உயர்த்தப்படும்.
இந்த வரி விடயத்தை மிக முக்கியமானதாகப் பார்க்க வேண்டியுள்ளது. 7 வீதத்திலிருந்து 15 வீதமாக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனைப் பாதகமான சூழ்நிலையாகவே பார்க்கின்றோம்; வரி வருமானத்திற்காகவே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏழை மக்கள் மீது சுமத்தப்படும் வரியாகவே இது உள்ளது. நேர் வரியாகவும், மறைமுக வரியாகவும் அறவிடப்படுகின்றது. நாட்டில் 35 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். இந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வறுமையைக் குறைக்க என்ன திட்டத்தை வைத்துள்ளீர்கள் என்று கேட்கின்றோம்.
இதேவேளை, வேலைவாய்ப்பு விடயத்தில் இளைஞர்களுக்குத் தொழில்வாய்ப்புகளை வழங்குவதென்றால் முதலீடுகளைக் கொண்டுவர வேண்டும். ஆனால், முதலீடுகளைக் கொண்டுவருபவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்படி நடந்தால், எவ்வாறு எமது இளைஞர், யுவதிகளுக்குத் தொழில்வாய்ப்புகளை வழங்குவது? இதனால், சரியாக முதலீட்டாளர்களை உள்வாங்கும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
அம்பாறை மாவட்டப் பிரதேச செயலகங்களுக்கு 2,000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதாகக் கூறுகின்றீர்கள். அந்த நிதியில் எங்களின் பிரதேச செயலகங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகின்றது என்பதனைக் கூற வேண்டும்” என்றார்.