தமிழ்த் தேசியத்தின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் சபையில் அஞ்சலி செலுத்தினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கோடீஸ்வரன் எம்.பி. இவ்வாறு அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது கோடீஸ்வரன் எம்.பி. தெரிவிக்கையில்,
“வடக்கு, கிழக்கில் இருக்கின்ற எமது தமிழ் மக்களுக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் இழப்பு, தமிழ் மக்களால் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தாம் இறக்கும் வரையில் தமது கொள்கையிலும், தேசியத்திலும் பற்றுறுதியுடன் தமிழருக்காகக் குரல் கொடுத்த மாமனிதராகவே அவரை நாங்கள் பார்க்கின்றோம். அவருக்கு இந்த இடத்தில் எமது அஞ்சலியைச் செலுத்துகின்றோம்” என்றார்.
இதேவேளை, அன்னாரது பூதவுடல், வல்வெட்டித்துறை இந்து மயானத்தில் திங்கட்கிழமை (16) மாலை 4 மணியளவில் அக்கினியுடன் சங்கமமானது.