நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பட மாளிகையில் வெளியான ஒரு வாரத்திற்குள் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் 207 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா- திரிஷா நடிப்பில் நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி- நீதியரசர் – நீதி மன்ற நடைமுறை – எளிய மக்களுக்கான நீதி ஆகியவற்றின் பின்னணியில் காவல் தெய்வமான கருப்பசாமியின் பங்களிப்பு குறித்து கொமர்சல் என்டர்டெய்னராக தயாரான ‘கருப்பு’ திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இப்படம் வெளியான நான்கு நாட்களில் 147 கோடியை வசூலித்தது. தொடர்ந்து மக்களின் பேராதரவு காரணமாக இந்த திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் 207 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்ததுடன், சூர்யாவின் திரையுலக பயணத்தில் புது நம்பிக்கையை அளித்திருக்கிறது.
இதனிடையே சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.