சென்னை:
தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்குச் சேர வேண்டிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை ஒன்றிய ஒதுக்கீட்டிற்குத் தாரைவார்த்து விட்டு, அதில் பாதியளவை மீளப் பெறும் தீர்ப்பைத் தவெக அரசு வெற்றியாகக் கொண்டாடுவது வெட்கக்கேடானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதங்களை எடுத்து வைக்கத் தவறி, தமிழகத்தின் உரிமையைத் தவெக அரசு பறிகொடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு என்பது வெறும் கல்வி வாய்ப்பல்ல; அது மாநிலத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் உயர்நோக்குக் கொள்கையாகும்.
நடப்பு கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புச் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 219 இடங்களில், நிரப்பப்படாத 151 இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்றக் கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் அரசு மருத்துவர்களின் உயர்கல்வி உரிமை பறிக்கப்பட்டது. இதனைத் தடுத்து நிறுத்தத் திறமையான மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வாதாடாததே தற்போதைய இந்தத் தோல்விக்கு முதன்மைக் காரணம் என்று சீமான் சாடியுள்ளார். மத்திய அரசின் சூழ்ச்சியை முறியடிக்கத் தவறியதோடு, இழந்த இடங்களை ஏதோ மாபெரும் சாதனை போல அமைச்சர் அருண்ராஜ் கொண்டாடுவது வேதனைக்குரியது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது என்பது வெறும் அரசு மருத்துவர்களுக்கான இழப்பு மட்டுமல்ல; எதிர்காலத்தில் தமிழக மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழப்பதாகும் எனக் குறிப்பிட்ட சீமான், தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்து, நம்முடைய அரசு மருத்துவர்களின் உயர் மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.
#Seeman #NaamTamilarKatchi #MedicalSeats #TvkGovt #BmNews #TamilNews #BreakingNewsTN #NeetIssue #TamilNaduPolitics #SupremeCourt #MinisterArunraj #PoliticalUpdate #TamilNewsLive