சென்னை
தமிழகத்தில் இரவு பகல் பாராது மக்கள் சேவையாற்றும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான 25 சதவீத ஊதிய உயர்வு மற்றும் 8.33 சதவீத குறைந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும் எனச் சென்னை தொழில் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டுள்ளது! இந்தத் தீர்ப்பு ஆம்புலன்ஸ் ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மற்றும் ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் 30 சதவீத ஊதிய உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் கோரி கடந்த பிப்ரவரியில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத் தலைவர் பி. முருகன், 2021-22 ஆம் ஆண்டிற்கான 16% ஊதிய உயர்வு ஏற்கனவே பேச்சுவார்த்தை அடிப்படையில் வழங்கப்பட்டதால், அதனை 30 சதவீதமாக உயர்த்தும் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். எனினும், 2022-23 ஆம் ஆண்டிற்குப் புதிய பேச்சுவார்த்தை ஏதும் நடத்தப்படாமல் பழைய ஊதிய உயர்வே தொடர்ந்ததைக் கருத்தில் கொண்டு, இ.எம்.ஆர்.ஐ. கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் 25% ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதில் ஏற்கனவே வழங்கப்பட்ட 16% உயர்வை நிறுவனம் கழித்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனத்தால் வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் பண்டிகைச் செலவுத்தொகையை ஒருபோதும் போனசாகக் கருத முடியாது என்பதால், தகுதியுள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் 8.33 சதவீத குறைந்தபட்ச போனஸ் தொகையைக் கட்டாயம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், வழக்குச் செலவிற்காக இரு தொழிற்சங்கங்களுக்கும் தலா ரூ.25,000 வீதம் இரண்டு மாதங்களுக்குள் நிறுவனம் வழங்க வேண்டும் எனவும் தொழில் தீர்ப்பாயம் தனது அதிரடித் தீர்ப்பில் தெரிவித்துள்ளது!
#108Ambulance #AmbulanceWorkers #WageHike #ChennaiIndustrialTribunal #TamilNaduNews #Chennai #ViralNews #LatestNewsTN #TrendingTN #TNWorkers #EMRIGreenHealth #BonusHike #TamilNews