ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரில் செவ்வாய்க்கிழமை காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், படுகாயமடைந்த நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விசாரணைகளை ஹாலிஃபாக்ஸ் பிராந்திய காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை 9:20 மணியளவில், செயின்ட் ஆண்ட்ரூஸ் அவென்யூவின் (St. Andrews Avenue) 3300 ஆம் கட்டடத் தொகுதிப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹாலிஃபாக்ஸ் பிராந்திய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
“துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட 25 வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் மீட்டதுடன், அவசர மருத்துவ சேவைப் பிரிவினர் (EHS) அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வரை முதலுதவி மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகளை வழங்கினர்” என்று காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அவ்விளைஞரின் காயங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகக் கருதப்படுகிறது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாகவும், எனினும் இத்துப்பாக்கிச் சூடு திட்டமிடப்படாமல் தற்செயலாக (Random) நடத்தப்பட்ட ஒன்றல்ல என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், சந்தேக நபர் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை, அப்பகுதியில் தற்போது பெருமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களினதும் வாகனங்களினதும் நடமாட்டத்திற்காக செயின்ட் ஆண்ட்ரூஸ் அவென்யூ முதல் ஃபெடரல் அவென்யூ (Federal Avenue) வரையிலான வீதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளன.