ஓமான் தேசத்தின் அஜ்மான் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐசிசி மகளிர் முன்னேறிவரும் நாடுகள் கிரிக்கெட் தொடரின் ஏ குழு போட்டியில் ஸ்கொட்லாந்தை 4 விக்கெட்களால் இலங்கை வெற்றிகொண்டது.
சுகந்திகா குமாரி, சத்யா சந்தீப்பனி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், விஷ்மி குணரட்னவின் திறமையான துடுப்பாட்டம் என்பன இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
இந்தத் தொடரில் இலங்கை ஈட்டிய இரண்டாவது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அரை இறுதி வாய்ப்பை இலங்கை அதிகரித்துக்கொண்டது.
இநதப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீராங்கனை டார்சி கார்டர் மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 62 ஓட்டங்களைப் பெற்றார்.
சுகந்திகா குமாரி 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சத்யா சந்தீப்பனி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.