வோகன் நகரில் வெறுப்புணர்வினால் தூண்டப்பட்ட (hate-motivated) இரண்டு தனித்தனி தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைத் தேடி வருவதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police) தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, முதலாவது சம்பவம் ஜூன் 9ஆம் தேதி இரவு 8:45 மணியளவில் ‘மேஜர் மெக்கன்சி டிரைவ் வெஸ்ட்’ (Major Mackenzie Drive West) மற்றும் ‘அமியூஸ்மென்ட் டிரைவ்’ (Amusement Drive) பகுதியில் இடம்பெற்றுள்ளது.
“சந்தேகநபர் பாதிக்கப்பட்டவரை அணுகி, இனவெறி சார்ந்த கருத்து ஒன்றைக் கூறி, பின்னர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்” என்று யோர்க் பிராந்திய பொலிஸார் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர். அத்துடன் தாக்குதலை நடத்திய பின்னர் சந்தேகநபர் அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டாவது தாக்குதல் ஜூன் 11ஆம் தேதி மதியம் 2:50 மணியளவில் ‘வெஸ்டன் வீதி’ (Weston Road) மற்றும் ‘ஸ்டார்லிங் பொலிவார்ட்’ (Starling Boulevard) பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.
இந்தச் சம்பவத்திலும், அதே சந்தேகநபர் பாதிக்கப்பட்டவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், கால்நடையாக தப்பியோடிச் செல்வதற்கு முன்னர் இனவெறி சார்ந்த கருத்தைக் கூறியுள்ளதாகப் புலனாய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் லேசான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“பாதிக்கப்பட்டவர்களின் பூர்வீக நாட்டின் (country of origin) அடிப்படையிலேயே அவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாக இரண்டு சம்பவங்களிலும் புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்” என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் சுமார் 6 அடி உயரமும், தோள் வரை நீளமான கறுப்பு முடியும், ‘சோல் பேட்ச்’ (soul patch – கீழ் உதட்டிற்கு கீழே இருக்கும் சிறிய தாடி) கொண்ட மீசையும் உடைய ஒரு தெற்காசிய வம்சாவளி ஆண் என விவரிக்கப்பட்டுள்ளார்.
“புலனாய்வாளர்கள் சந்தேகநபரின் புகைப்படங்களை வெளியிட்டு வருவதுடன், அவரை அடையாளம் காண்பவர்கள் அல்லது அந்தப் பகுதியில் ஏதேனும் விபரங்கள் அல்லது வீடியோ பதிவுகளைக் கொண்டிருப்பவர்கள் முன்வந்து தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்” என அந்த ஊடக அறிக்கையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.