வெள்ளை மாளிகைக்கு வெளியே இரகசிய சேவைப் பிரிவு (Secret Service) அதிகாரிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர், அதிகாரிகளின் பதில் துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அப்பிரிவு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது அங்கிருந்த பொதுமகன் (Bystander) ஒருவரும் காயமடைந்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் வடக்கு புல்வெளிப் (North lawn) பகுதியில் தொடர்ச்சியாகப் பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் முழங்கிய போது, ஏபிசி நியூஸ் (ABC News) செய்தியாளர் செலினா வாங் பதுங்கித் தப்பிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாகப் பிறப்பிக்கப்பட்ட வெள்ளை மாளிகையின் அவசர பாதுகாப்பு முடக்கல் நிலை (Lockdown) தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இத் துப்பாக்கிச் சூடு நடந்த வேளையில் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் வெள்ளை மாளிகைக்குள்ளேயே இருந்த போதிலும், “பாதுகாப்பிலிருந்த முக்கிய நபர்களுக்கோ அல்லது வெள்ளை மாளிகை செயல்பாடுகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை” என இரகசிய சேவைப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.