கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.கடற்கரை வீதியில் (Marine Drive) பெருமளவிலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையிலும், சிங்கள அமைப்புகளைச் சேர்ந்த சிலர் அங்கு குழப்பம் விளைவிக்க முயன்றனர்.
அவர்கள் கடற்கரையில் கூடி, நிகழ்வில் பங்கேற்ற மக்களை நோக்கித் தகாத வார்த்தைகளால் வசைபாடினர்.
“நீங்கள் புலிகள், உங்களைக் கொலை செய்வேன்” என்று அவர்களில் ஒருவர் கூச்சலிட்டார். எனினும், நிகழ்வு நடைபெறும் இடத்திற்குள் நுழைய முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
இந்த சம்பவத்தின் காரணமாக வெள்ளவத்தை கடற்கரை வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.