சென்னை:
சென்னையில் கனமழையால் தேங்கிய மழைநீர், திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளால் உடனடியாக வெளியேறியது என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தவெகவினரின் வெட்டி விமர்சனம்:
திராவிட மாடல் அரசுக்குக் கிடைத்துள்ள பாராட்டுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத தவெகவினர், 4,000 கோடி ரூபாய் செலவு செய்தது இதற்குத்தானா என்று சமூக வலைதளங்களில் முகாந்திரமில்லாத விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இதை நடுநிலையாளர்கள் உணர்கிறார்கள், சென்னைவாழ் மக்கள் புரிந்துகொண்டு பாராட்டுகிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் திருப்புகழ் கமிட்டியை அமைத்து, அதன் இடைக்காலப் பரிந்துரைகளை உடனே நிறைவேற்றியது மு.க.ஸ்டாலின் அரசு என்று அவர் தெரிவித்துள்ளார்.
1,000 கி.மீ. மழைநீர் வடிகால்:
கடந்த ஐந்தாண்டுகளில் 1,000 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகளை முடித்தோம். கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் மட்டும் 600 கி.மீ.க்கு மேல் பணிகள் முடிக்கப்பட்டன. 37 நீர்வழிக் கால்வாய்களில் வெள்ளத் தடுப்புச் சுவர்களின் உயரம் அதிகரிக்கப்பட்டது. 770 இடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. 60 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டன. கோவளம் வடிநிலப் பணிகள், டிரஸ்ட்புரம் கால்வாய், கடப்பாக்கம் ஏரி மேம்பாடு, அடையாறு ஆற்றுப் புனரமைப்பு, ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய்கள் புனரமைப்பு உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் திட்டங்களால், ஓரிரவில் பெய்த கனமழையால் தேங்கிய நீர் அந்த இரவு விடிவதற்குள் வடிந்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
ஆணையரின் பேட்டியே சாட்சி:
முதலமைச்சர் ரிப்பன் மாளிகையில் ஆய்வு செய்த பின்னர் பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் சமீரன், கடந்த காலங்களைவிட இப்போது மழைநீர் தேங்கும் இடங்கள் குறைந்துள்ளன என்று கூறியிருக்கிறார். இதுதான் எங்கள் ஆட்சியின் சாதனைக்கு எடுத்துக்காட்டு என்று அவர் தெரிவித்துள்ளார். கனமழை என்றாலும் வெள்ளம் என்றாலும் முதலில் ரிப்பன் மாளிகைக்கு வந்து ஆய்வு செய்பவராக அன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் இருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார். அப்போது ஆணையர்களாக இருந்த ககன்தீப் சிங் பேடி, குமரகுருபரன் ஆகியோரிடம் கேட்டாலே பணிகளைப் பட்டியலிட்டுச் சொல்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருப்புகழ் கமிட்டியின் நீண்டகாலப் பரிந்துரைகளை நிறைவேற்றுவதும், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து நிறைவேற்றுவதும் தவெக அரசின் பொறுப்பு என்றும் கே.என்.நேரு சுட்டிக்காட்டியுள்ளார்.
#KNNehru #DMK #ChennaiRain #DravidianModel #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive