ரஷ்யாவுக்கான முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரின் மகனின் பல்கலைக்கழக விண்ணப்பத்தை ஏற்க மறுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
மனுதாரரான தம்சித் ஜயரத்ன, கொழும்பு ரோயல் கல்லூரியில் மாணவராக இருந்தபோது, அவரது தந்தை க்ரூப் கெப்டன் சரோஜ் ஜயரத்ன ரஷ்யாவுக்கான இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலையில் நியமிக்கப்பட்டதையடுத்து, குடும்பத்துடன் அவரும் மொஸ்கோ சென்றார்.
மொஸ்கோவில் உள்ள இந்தியப் பாடசாலையில் கல்வி பயின்ற தம்சித் ஜயரத்ன, அங்கு உயர்தரப் பரீட்சைக்கு இணையான தகுதியைப் பூர்த்தி செய்து 4 ‘A’ தரங்களைப் பெற்றார்.
வெளிநாடுகளில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் கல்வி பயிலும் மாணவர்கள், வெளிநாட்டு உயர்தரத் தகுதிக்கு இணையான தகுதியுடன் கட்டணம் செலுத்தி இலங்கை பல்கலைக்கழகங்களில் சேர பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதிக்கிறது.
இந்தநிலையில், தூதரக சேவையில் உள்ளவர்களின் பிள்ளைகள், இரண்டு ஆண்டுகளுக்குள் சேவை அவசியம் காரணமாக இலங்கைக்குத் திரும்ப அழைக்கப்பட்டாலும், இந்த வகையின் கீழ் பல்கலைக்கழகத்தில் நுழைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விதிவிலக்கு அளித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், மனுதாரரின் தந்தையின் ஆரம்ப நியமனம் இரண்டு ஆண்டுகளுக்கானது என்பதாலும், அந்தக் காலப்பகுதியில் அவர் திரும்ப அழைக்கப்படாததாலும், உயர் தரத்துக்கு இணையான பரீட்சையை அவர் அங்கு நிறைவு செய்ததாலும், தூதரக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு அனுமதிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக மனுதாரர் கூறியுள்ளார்.
இந்தக் காரணத்தைக் காட்டி, தூதரக ஊழியர்களின் பிள்ளைகளுக்குரிய திட்டத்தின் கீழ் தம்சித்தின் விண்ணப்பத்தை ஆணைக்குழு நிராகரித்துவிட்டது.
இந்தநிலையில், கடந்த டிசம்பர் 10ஆம் திகதியன்று இது தொடர்பான மனு விசாரிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் திகதிக்கு முன்னுரிமை அடிப்படையில் விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.