பாதுக்கையிலிருந்து அனுராதபுரத்திற்குச் சென்ற குழுவினர் பயணித்த வேன் ஒன்று, அனுராதபுரம் – பாதேனிய பிரதான வீதியின் சிராவஸ்திபுர, மொரகொட பகுதியில் காட்டு யானை ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காட்டிலிருந்து கிராமத்திற்குள் நுழைந்த இந்த யானை, வௌ்ளிக்கிழமை (24) அதிகாலை மீண்டும் காட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது வீதியில் பயணித்த வேனுடன் மோதியுள்ளது. விபத்திற்குப் பிறகு கோபமடைந்த யானை, வேனையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் வேனில் சுமார் 6 பேர் வரை இருந்துள்ளனர்.
பிரதேசவாசிகள் இணைந்து உடனடியாகச் செயற்பட்டு யானையை விரட்டி, காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மீது அடிக்கடி காட்டு யானைகள் தாக்குதல் நடத்துவதாகப் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர். வீதிக்கு அருகில் உள்ள தேக்குக் காட்டிலிருந்து வரும் யானைகள் கிராமத்திற்குள் புகுந்து மனித உயிர்கள், வீடுகள் மற்றும் சொத்துக்களுக்குக் கடும் சேதத்தை ஏற்படுத்துவதாகவும், இதுவரை இக்கிராமத்தில் யானைத் தாக்குதலால் சுமார் 20 உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.