மொன்றியலில் பொலிஸ் அதிகாரி, ஒரு பொதுமக்கள் மற்றும் சந்தேக நபர் என மூவர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து கியூபெக்கின் (Quebec) பொலிஸ் கண்காணிப்பகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதேவேளை, கியூபெக் மாகாண பொலிஸார் இதற்கு இணையாக மற்றுமொரு குற்றவியல் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) மாவட்டத்தில் உள்ள ஹில்டன் (Hilton) ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் இருப்பதாகக் கிடைத்த 911 அவசர அழைப்பிற்கு அமைய, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மொன்றியல் பொலிஸ் மா அதிபர் ஃபாடி டஹர் (Fady Dagher) தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில், 2021 ஆம் ஆண்டு முதல் மொன்றியல் பொலிஸ் படையில் பணியாற்றி வந்த 34 வயதான முகமது லமீன் பென்ரெடோவான் (Mohamed Lamine Benredouane) என்ற பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேக நபர் மற்றும் ஒரு பொதுமக்கள் ஆகியோரும் கொல்லப்பட்டதுடன், இரண்டாவது பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக டஹர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர் யார் என்பது குறித்தோ அல்லது இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்தோ பொலிஸார் இதுவரை விபரங்களை வெளியிடவில்லை. எனினும், சம்பவ இடத்திலிருந்து நீளமான துப்பாக்கி (Long gun) ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில், ஆயுதமேந்திய அபாயகரமான சந்தேக நபர் நடமாடியதால், நகரின் பல வீதிகள் முடக்கப்பட்டதுடன், குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் நடந்த பல்லின மக்கள் வாழும் அண்டை பகுதிக்கு மொன்றியல் மேயர் சொரயா மார்டினெஸ் ஃபெராடா (Soraya Martinez Ferrada) இன்று காலை விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.