டொராண்டோவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சந்துப் பாதையில் (laneway) மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் யார் என்பதை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. அத்துடன், இது தொடர்பான கொலைக் புலனாய்வு விசாரணைகளும் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.
டொராண்டோவைச் சேர்ந்த 28 வயதான ஐசையா பீட்டர்ஸ் அலெக்சாண்டர் (Isaiah Peters Alexander) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் 2026 ஆம் ஆண்டில் டொராண்டோ நகரில் பதிவான 15ஆவது கொலைப் பலியாவார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2:15 மணியளவில், எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட் (Eglinton Avenue West) மற்றும் யாரோ ரோட் (Yarrow Road) பகுதிக்கு அருகில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாகக் கிடைத்த அழைப்பையடுத்து டொராண்டோ காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்தது.
அங்குள்ள ஒரு சந்துப் பாதையில் நபர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் கிடப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர உதவிப் பிரிவினர், அவருக்கு உயிர் காக்கும் முதலுதவிகளை வழங்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, பரா மருத்துவர்களால் (paramedics) அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறை முதற்கட்டமாகத் தெரிவித்தது.
எனினும், தொடர் விசாரணைகளின் மூலம் அந்த நபர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.