சென்னை
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, சட்டைப்பையில் மு.க.ஸ்டாலின் புகைப்படம் வைத்திருப்பது குறித்து திமுக உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவை முன்னவர் செங்கோட்டையன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு ஓ.பி.எஸ் அளித்த உணர்ச்சிகரமான விளக்கம் அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் அனல்பறந்த விவாதம்:
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, அது ஏமாற்றம் அளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டிப் பேசினார். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் செங்கோட்டையன், “3 மாதங்களில் ஒரு சரித்திரம் படைக்க இயலாது. இடத்தை மாற்றிய நீங்கள், அதற்காகத் துதிபாட வேண்டிய அவசியம் இல்லை,” என்று விமர்சித்தார். இதற்குப் பதிலளித்த ஓ.பி.எஸ், “அந்த இடத்தை முதலில் மாற்றியவர் செங்கோட்டையன்தான்” என்றார்.
அப்போது குறிக்கிட்ட அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் ஆதவ் அர்ஜுனா, “ஜெயலலிதாவால் முதலமைச்சராக்கப்பட்டவர் இன்று சட்டைப்பையில் யாருடைய புகைப்படத்தை வைத்துள்ளார் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். இதயமும் மாறியுள்ளது,” என்று விமர்சித்தனர். இதற்கு, “படத்தைக் காட்டி ஏமாற்றும் பழக்கம் எங்களுக்கு இல்லை,” என்று ஓ.பி.எஸ் பதிலடி கொடுத்ததால் அவையில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலையிட்டு இரு தரப்பையும் அமைதிப்படுத்தினார்.
ஸ்டாலின் புகைப்படத்திற்கு ஓ.பி.எஸ் அளித்த விளக்கம்:
சட்டைப்பையில் மு.க.ஸ்டாலின் படத்தினை வைத்திருப்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் விரிவான விளக்கம் அளித்தார். “நான் இன்று சட்டமன்ற உறுப்பினராக நின்றுகொண்டிருப்பதற்குக் காரணம் திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சிதான். கடந்த 5 ஆண்டுகாலம் தமிழகத்தின் உரிமைகளை எந்நாளும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று ஆட்சியிலும், கட்சியிலும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கவே அவருடைய புகைப்படத்தை இதயப் பக்கத்தில் இருக்கும் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பட்ஜெட் மீது ஓ.பி.எஸ் கடும் விமர்சனம்:
தொடர்ந்து தவெக அரசின் பட்ஜெட் குறித்துக் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார்:
-
ஏமாற்றம்: இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கான ஏமாற்றத்தின் வடிவமாகவே உள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டங்களே புது உருக்கொண்டு நிற்கின்றன.
-
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்: தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிர் உரிமைத்தொகை உயரவில்லை. ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் வரும் என நம்பிய மகளிர் ஏமாந்து நிற்கிறார்கள். ‘விடியல் பயணம்’ திட்டத்தை விரிவுபடுத்துவோம் என்பதையும் ஏமாற்றிவிட்டீர்கள்.
-
நிதிப் பகிர்வு: மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என மு.க.ஸ்டாலின் சமரசம் இல்லாமல் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், மத்திய அரசின் நிதிப் பகிர்வு போதுமானதாக இல்லை என்ற உண்மையைக்கூட இந்த பட்ஜெட்டில் அரசு சுட்டிக்காட்டவில்லை.
-
முதலீடுகள் குறைவு: பட்ஜெட்டில் அறிவிப்புகள் அதிகமாக இருந்தாலும், செயலாக்கத்துக்கான முதலீடுகள் மிகக் குறைவு என்பதே இதன் உண்மை முகம். மக்கள் நலனில் மு.க.ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதுதான் இந்த பட்ஜெட்டில் புலப்படும் உண்மை.
#OPanneerselvam #OPS #MKStalin #Sengottaiyan #TNAssembly #DMK #TVKGovernment #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates