இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் பேருந்து ஒன்றில் வெறுப்புணர்வால் தூண்டப்பட்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 13 அன்று புரோகிரஸ் அவென்யூ (Progress Avenue) மற்றும் மில்னர் அவென்யூ (Milner Avenue) பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பேருந்தில் இருந்தபோது சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை அணுகி, பல அவதூறான மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களைக் கூறியதாகக் கூறப்படுகிறது.
அதன்பின் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரைத் தாக்கிவிட்டு, சிறிது நேரத்திலேயே பேருந்திலிருந்து இறங்கிச் சென்றுவிட்டதாக காவல்துறை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டொராண்டோவைச் சேர்ந்த 36 வயதான திருக்குமரன் கந்தசாமி (Thirukumaran Kandasamy) என்பவரை புதன்கிழமை அன்று கைது செய்த காவல்துறை, அவர் மீது தாக்குதல் மற்றும் குற்றவியல் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
அவர் இந்த கோடைகாலத்தின் பிற்பகுதியில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
டொராண்டோ காவல்துறை சேவையின் வெறுப்புணர்வுக் குற்றப் பிரிவினால் (Hate Crime Unit) இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.