சென்னை:
பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
சொத்துகள் மறைப்புக் குற்றச்சாட்டு:
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து, வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாகத் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை நிராகரிக்கக் கோரி விஜய் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “சுமார் 230 கோடி ரூபாய் அசையா சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், பண்ருட்டியில் உள்ள 30 கோடி ரூபாய் சொத்தை மறைத்துள்ளார். கொடைக்கானலில் அரசுப் புறம்போக்கு நிலத்தை வாங்கியதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். சொத்து ஆவணங்களை மறைத்திருப்பதை நீதிமன்றம் உறுதி செய்தால் தேர்தல் வெற்றியை ரத்து செய்யலாம் என உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன,” என வாதிடப்பட்டது.
விஜய் தரப்பு மறுப்பு:
முதலமைச்சர் விஜய் தரப்பில், “எந்தச் சொத்து ஆவணங்களையும் வேண்டுமென்றே மறைக்கவில்லை. தேர்தல் விதி 7(b)-ன்படி சுமார் 220 கோடி ரூபாய் அசையா சொத்துகள் உட்பட மொத்தம் 630 கோடி ரூபாய் உள்ளது எனப் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சொத்துகள் என்ன, எங்கே உள்ளன என்பதைத் தெரிவித்தால் போதும்; தற்போதைய சந்தை மதிப்பைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. விஜய் முறைகேடு செய்ததாக மனுதாரர்கள் எந்த ஆதாரத்தையும் குறிப்பிடவில்லை,” எனத் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை நிராகரிக்க முடியாது எனத் தீர்ப்பு:
முன்னதாக, 600 கோடி ரூபாய் சொத்து உள்ளதாகக் கூறியவர் 30 கோடி ரூபாயை ஏன் மறைக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பித் தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன் இன்று தீர்ப்பளித்தார். அதில், பண்ருட்டி மற்றும் கொடைக்கானலில் உள்ள சொத்துகளை மறைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துத் தேர்தல் வழக்கு விசாரணையில்தான் முடிவு செய்ய முடியும் என்பதால் வழக்கை நிராகரிக்க முடியாது எனத் தெரிவித்து, முதலமைச்சர் விஜய் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
#CMVijay #PeramburElectionCase #MadrasHighCourt #RDSekar #TVK #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive