சென்னை:
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான பெண் அதிகாரி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிபிஐ விசாரணை கோரி திமுக முன்னாள் எம்.பி மனு:
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கைது செய்யக் கோரியும், அவரைப் பதவி விலகக் கோரியும் பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், திமுக முன்னாள் எம்.பி கனிமொழி சோமு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
தமிழகக் காவல்துறையே திறமையான அமைப்பு:
இந்த வழக்கு நீதிபதி லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தவெக எம்.எல்.ஏ மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என முறையிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி லட்சுமிநாராயணன், “தவெக எம்.எல்.ஏ மீதான பெண் அதிகாரி வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை. தமிழகக் காவல்துறையே திறமையான அமைப்புதான்; தமிழ்நாடு காவல்துறையில் திறமையான அதிகாரிகள் உள்ளனர். வழக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் தமிழகத்தில் சிபிஐ கிளைதான் அமைக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
மாலை 3.30 மணிக்கு காணொலியில் விசாரணை:
இதற்கிடையில், இதே விவகாரம் தொடர்பாக முன்னதாக நடைபெற்ற விசாரணையின்போது மாவட்ட ஆட்சியர் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார். அதன்படி, இந்த வழக்கின் விசாரணை மாலை 3.30 மணிக்கு காணொலிக் காட்சி மூலமாக நடத்தப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, விசாரணையை மாலைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். பெண் அதிகாரி அளித்த புகார் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய முறையீட்டில், சென்னை உயர் நீதிமன்றம் தமிழகக் காவல்துறையின் திறன் குறித்துத் தெரிவித்துள்ள இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
#MadrasHighCourt #KallakurichiMLA #ArulVignesh #CBIInquiry #KanimozhiSomu #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive