சென்னை
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து மிகவும் அநாகரிகமான முறையில் அவதூறாகப் பேசியதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது தமிழக காவல்துறை தலைமை இயக்குநரிடம் (DGP) ஆன்லைன் மூலமாகப் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சு:
சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “சட்டசபைக்குச் சென்று அப்பா எங்கே என்று சிலர் தேடுகிறார்கள். வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று கூறுவார்கள். அதை விட்டுவிட்டு, சட்டசபைக்குச் சென்று அப்பாவைத் தேடினால் யாருக்குத் தெரியும்? இப்படிப்பட்டவர்களின் ஆட்சிதான் இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது,” என்று மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துப் பேசினார். கடந்த சட்டசபைக் கூட்டத்தொடரின் போது, முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில் “அப்பாவை எங்கே காணோம்” என்று பேசியிருந்ததைச் சுட்டிக்காட்டியே நயினார் இவ்வாறு பேசியுள்ளார்.
தலைவர்கள் கடும் கண்டனம்:
நயினார் நாகேந்திரனின் இந்தத் தரம் தாழ்ந்த பேச்சுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், ‘வீ தி லீடர்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை, தவெக அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜ்மோகன், ரமேஷ் மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
டிஜிபியிடம் ஆடியோ ஆதாரத்துடன் புகார்:
இந்நிலையில், முதலமைச்சர் விஜய்யின் நற்பெயருக்கும் கண்ணியத்திற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாகப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த வர்தினி என்பவர் தமிழக டிஜிபியிடம் ஆன்லைன் மூலமாக அதிகாரப்பூர்வப் புகார் அளித்துள்ளார். மேலும், தனது புகாருடன் நயினாரின் சர்ச்சை பேச்சுக்கான ஆடியோ ஆதாரங்களையும் அவர் இணைத்து அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #TVKGovernment #NainarNagendran #BJP #TNDGP #TamilNaduPolice #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates