மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலைப் பகுதியில் பெண்கள் ஏமாற்றப்பட்டு, மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, கொள்ளையிடப்பட்ட பின்னர் கிணறுகளில் வீசப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் தொடர்பில் வத்தளையைச் சேர்ந்த 49 வயதுடைய மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மறுநாள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக 3 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த சமீபத்திய கைதுடன் மொத்த சந்தேக நபர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனியாகப் பயணம் செய்யும் பெண்களை இலக்கு வைத்து, அவர்களை முச்சக்கர வண்டியில் ஏற்றி, போதைப்பொருள் கலந்த பொருட்களை உட்கொள்ளச் செய்து, நகைகளைத் திருடிக்கொண்டு, அவர்கள் மயக்கமடைந்த நிலையில் கிணறுகளில் கைவிட்டுச் செல்வதையே இந்தக் குழுவினர் வழக்கமாகக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார், மற்றொருவர் உயிர் தப்பிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறொரு சம்பவத்தில், தனது மூன்று வயது குழந்தையுடன் பயணம் செய்த தாய் ஒருவர் தாக்கப்பட்டார். அக்குழந்தை பின்னர் கைவிடப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டது