லங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்பை முற்றாக ஒழிக்கும் நோக்குடன் அரசால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ விசேட தேசிய செயற்திட்டத்தின் கீழ், இதுவரை 2 இலட்சத்து 14 ஆயிரத்து 333 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்தத் தேசிய திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வரையிலான காலப்பகுதியில், முப்படைகள் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பங்களிப்புடன் நாடு முழுவதும் 2 இலட்சத்து 15 ஆயிரத்து 526 விசேட சோதனை நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சுற்றிவளைப்புகளின் போதே மேற்படி பெருமளவிலான சந்தேகநபர்கள் வலைவீசிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்த சந்தேகநபர்களில், பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் சர்வதேச வலைப்பின்னல்களுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 112 பிரதான குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக முறையான ‘தடுத்து வைக்கும் உத்தரவுகள்’ பெறப்பட்டு தீவிர விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்கள், காணிகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களைச் சேர்த்ததாகக் கண்டறியப்பட்ட 360 முக்கிய புள்ளிகளின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் தொடர்பாக, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்தச் சோதனை நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் பழக்கத்துக்குத் தீவிரமாக அடிமையாகிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட 2 ஆயிரத்து 188 பேர், அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் உரிய புனர்வாழ்வு சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தேசிய செயற்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, இலங்கை வரலாற்றில் மிக அதிகளவிலான போதைப்பொருள் தொகுதிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.