சென்னை
சென்னையில் ’போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற மாபெரும் இயக்கத்தைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் விஜய், மாணவர்களுடன் சேர்ந்து ஆவேசமாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
மாநிலக் கல்லூரியில் பிரம்மாண்ட உறுதிமொழி ஏற்பு:
சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய், கையை உயர்த்தியபடி, ”போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருளைத் தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்கேற்பேன் என உளமார உறுதி கூறுகிறேன்” என்று மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றார்.
சிறப்பாகச் செயல்பட்ட அதிகாரிகளுக்கு விருது & ரொக்கப் பரிசு:
தொடர்ந்து போதைப்பொருள் உற்பத்தித் தடுப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார். பின்னர் பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய ஈரோடு மாவட்டம் செங்கோடம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் விஜய் வழங்கினார். அதனைத் தொடர்ந்து இரண்டாம் பரிசு பெற்ற தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வெற்றிச் சான்றிதழுடன் ரூ.75 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
ரூ.264 கோடியில் புதிய போதைப்பொருள் தடுப்புப் படை (ANTF):
முன்னதாகத் தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல், உற்பத்தி மற்றும் அதன் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் வகையில் ‘போதைப்பொருள் தடுப்புப் படை’ (Anti Narcotics Task Force) உருவாக்கத் தமிழ்நாடு அரசு நிதி ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் ரூ.264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன்கீழ் 65 சிறப்புக் காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்தப் படைக்குக் கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP) தலைமை வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#DrugFreeTamilNadu #ChiefMinisterVijay #ThalapathyVijay #TVKGovernment #AntiNarcoticsTaskForce #TamilNaduNews #Chennai #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates