யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது ஒரு முன்னாள் மாணவி (இரண்டு வருடங்கள் தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்) துஸ்பிரயோகக் குற்றச்சாட்டு தெரிவித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார். இதையடுத்து பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் டிக்டோக், முகநூல் தளங்களில் பரவின. இதையடுத்து, பேராசிரியர் ரகுராம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு 20இன் கீழ், தன் மீது குற்றச்சாட்டு வைத்த மாணவி, அவரது நண்பி, பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டு 14 பேரை எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிட்டு வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இன்றைய திருப்பம் (ஜூலை 13):
- வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 1, 3, 4, 5, 6ஆவது எதிர்மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக இட்ட அவதூறான பதிவுகளை அகற்ற வேண்டும் என நீதிமன்று இடைக்கால கட்டளையிட்டுள்ளது.
- இது தொடர்பான எந்த விடயத்தையும் இனி சமூக வலைத்தளங்களில் பதிவிடக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- எதிர்மனுதாரர்களுக்கு அழைப்பாணை அனுப்பவும், அவர்களின் காரணங்காட்டுதலுக்காக அடுத்த விசாரணையை ஜூலை 27ஆம் திகதிக்கு நீதிமன்று திகதியிட்டுள்ளது.