கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை தவறாக பயன்படுத்தி மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட வரலாறு இலங்கைக்கு உண்டு என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் எலைன் பியர்சன் புதிய சட்டமூலம் அந்த தவறுகள் மீண்டும் இடம்பெறுவதை தடுப்பதற்கு பெருமளவிற்கு உதவப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்
இலங்கையின் அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் புதிய சட்டமூலம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கையின் அதிகாரிகள் நீண்டகாலமாக சிறுபான்மையினரை துன்புறுத்துவதற்கும் , மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை கோரும் செயற்பாட்டாளர்களை இலக்குவைப்பதற்கும் நீண்டகாலமாகவே கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை பயன்படுத்தி வந்துள்ளனர் .
முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டமூலமானது சர்வதேச சட்டங்களின் கீழ் இலங்கைக்குள்ள கடப்பாடுகளை மீறுவதோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி மீண்டும் மனித உரிமை மீறல்களுக்கு வழிகோலும்.
சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் திருத்தப்படும் வரை அல்லது புதிய சட்டமூலமொன்றை தயாரிக்கும்வரை இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடையை விதிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.