அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட விடயங்களுக்கும், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறிப்பிடும் விடயங்களுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்வது எவ்வாறு என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை (14) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றளவில் போதுமான நிவாரணம் கிடைக்கவில்லை. அதேபோல் நிவாரண நிதியும் கிடைக்கவில்லை. பெரும்பாலானவர்களை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட விடயங்களுக்கும், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறிப்பிடும் விடயங்களுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.
நிவாரணம் வழங்கல் தொடர்பில் சுற்றறிக்கைகள் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளன.ஆனால் தரப்படுத்தல் விதிகள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் பிரச்சார மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளை போன்று நிவாரண கொடுப்பனவு அறிவிப்புகளும் அமைந்து விடக்கூடாது.
தற்போதைய நெருக்கடி நிலைமை மற்றும் மக்களுக்கு நிவாரணமளிப்பது குறித்து ஜனாதிபதிக்கும்,அரசாங்கத்துக்கும் ஆலோசனை வழங்க தயாராகவே இருக்கிறோம்.தற்போதைய நெருக்கடியான நிலையில் இருந்து மீள்வதற்கு எடுக்கும் நடவடிக்கைகளை வெற்றிப் பெறச் செய்ய வேண்டுமாயின் அரசாங்கம் எதிர்;கட்சிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.