பளை வனப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாதப் பயிற்சி முகாம் இயங்கி வருவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் குறிப்பிடப்படும் குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாமோ அல்லது பயங்கரவாதப் பயிற்சி நிலையமோ இல்லை என அவர் கூறினார்.
இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தனிநபர் ஒருவர் வனப் பாதுகாப்புப் பகுதிக்குள் அனுமதியின்றி ஒரு பகுதியை அழித்து, அங்கு பல மாடிக் கட்டிடமொன்றை நிர்மாணித்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது அந்த இடத்தில் ஆடை உற்பத்தி நிலையமொன்று இயங்கி வருவதாகவும், அதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.