இலங்கையின் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலம் குறித்து கடும் கவலை வெளியிட்டுள்ள சித்திரவதைக்கு எதிரான சர்வதேச அமைப்பு இந்த சட்டமூலத்தில் அரசாங்கம் மாற்றியமைக்க முயலும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படும் தன்னிச்சையாக தடுத்துவைத்தல்,சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் சரத்துக்கள் காணப்படுகின்றன என தெரிவித்துள்ளது.
சர்வதேச அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது
ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான சாசனத்தின் கீழ் இலங்கைக்குள்ள கடப்பாடுகளுக்கு முரணாக அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்ந்தும் அளவுக்கதிகமான பரந்துபட்ட வரையறைகளை பயன்படுத்துவதோடு பரந்த கைது மற்றும் தடுத்துவைத்தலிற்கான அதிகாரங்களையும் வழங்குகின்றது.
அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் பயங்கரவாதத்திற்கான வரையறை தொடர்பில் விசேட கவலைகளை எழுப்புகின்றது. பயங்கரவாதம் குறித்த வரையறை தொடர்ந்தும் அளவுக்கதிகமான பரந்ததாகவும் போதுமான அளவு துல்லியமற்றதாகவும் காணப்படுகின்றது.
அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் முப்படையினருக்கு கைதுசெய்தல், சோதனையிடுதல்,தடுப்புக்காவலில் வைத்தல் ஆகியவற்றிற்கான விரிவான அதிகாரத்தினை வழங்குகின்றது, பொலிஸ் காவலுக்கு ஒருவரை மாற்றுவதற்கு முன்னர் படையினர் ஒருவரை 24ம் திகதி தடுத்துவைத்திருக்க முடியும் என சர்வதேச அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.