ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போரினால் சர்வதேச ரீதியில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், கொரியன் எயார் உள்ளிட்ட ஆசிய விமான சேவை நிறுவனங்கள் ‘நெருக்கடி கால முகாமைத்துவ’ நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
கொரியன் எயார்
விமான எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக கொரியன் எயார் நிறுவனம் அவசரகால முகாமைத்துவ முறையை அமுல்படுத்தியுள்ளது.
நிறுவனத்தின் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்த “உள்வாரிச் செலவுகளைக் குறைக்கும்” நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
இது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமல்லாது, நிறுவனத்தின் அடித்தளத்தை பலப்படுத்தும் ஒரு முயற்சி என அதன் துணைத் தலைவர் வூ கி-ஹொங் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 28 அம் திகதி அன்று போர் ஆரம்பித்ததிலிருந்து மசகு எண்ணெய் விலை 50 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
சர்வதேச விமான எரிபொருள் விலை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
தென் கொரியா
மத்திய கிழக்கின் எரிபொருளை அதிகம் நம்பியிருக்கும் நாடாவதால், ஏசியானா எயார்லைன்ஸ் மற்றும் புசான் எயார் ஆகியவையும் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளன. சில நிறுவனங்கள் விமானப் பயணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளன.
சீனா மற்றும் ஹொங்கொங்
உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான சீனாவின் ‘சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ்’ போரினால் கடும் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளது. ஹொங்கொங்கின் ‘கதே பசிபிக்’ ) நிறுவனம் தனது விமானக் கட்டணங்களை பாரியளவில் அதிகரித்துள்ளது.
ஜப்பான்
ஜப்பான் ஏர்லைன்ஸ் தனது மத்திய கிழக்கு வழித்தடங்களை மூடியுள்ளதால், ஐரோப்பாவிற்கான பயணக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. எனினும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லை என ‘ஏ.என்.ஏ’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா
இந்தியாவின் சர்வதேச விமானச் சந்தையில் பெரும் பங்கைக் கொண்ட மத்திய கிழக்கிற்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்திய விமானத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் அக்டோபர் வரை உள்நாட்டு விமானப் பயணங்கள் 10 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர்
ஈரான் மீதான போர் காரணமாக விமான எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் மலிவு விலை விமான சேவையான ‘ஸ்கூட்’ (Scoot) ஆகியன பயணக் கட்டணங்களை அதிகரித்துள்ளன.
விமான நிறுவனத்தின் மொத்தச் செலவீனத்தில் எரிபொருள் செலவு மாத்திரம் சுமார் 30% ஆகும். தற்போதைய விலை உயர்வு நிறுவனத்தின் நிதி நிலையை கடுமையாகப் பாதித்துள்ளது.
2026 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரவிருந்த ‘பசுமை விமான எரிபொருள் வரி’ தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.