ஈரானுடன் நீண்டகால அமைதியை ஏற்படுத்துவதற்கான உடன்படிக்கையொன்று எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்த புதிய அமைதி உடன்படிக்கையின் கீழ் உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறந்து விடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஈரானிடம் அணு ஆயுதம் சேர்வதை இந்த ஒப்பந்தம் முற்றிலும் தடுக்கும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி, பிராந்திய அமைதிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் மிகவும் சாதகமான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
அத்துடன், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடத்திய தொலைபேசி உரையாடல் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் இறுதி கட்ட விபரங்கள் தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அவை விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.