சென்னை
தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் மிகவும் பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2 நாள் விடுமுறை முடிந்து இன்று காலை 9.30 மணிக்குத் தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. கூட்டத்தின் தொடக்கமாக முதலில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
“நாங்கள் டென்ஷனாக இருக்கிறோம்” – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்:
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆளுங்கட்சியினரைப் பார்த்து, “நீங்கள் எல்லாம் மிகவும் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்; ஆனால் நாங்கள் அனைவரும் டென்ஷனாக இருக்கிறோம்” என்று பேசினார்.
“தினம் தினம் டென்ஷனாக இருக்கிறோம்” – அமைச்சர் ஆனந்த் பதில்:
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் இந்தப் பேச்சுக்குப் பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், “ஒரு சின்ன வாய்க்கால் பிரச்சினை என்றால் கூட… இன்று காலையில்கூட எனக்கு போன் செய்து, அந்தப் பிரச்சினை சரியாகிவிட்டதா என்று அக்கறையோடு கேட்கக்கூடிய ஒரு முதலமைச்சர்தான் நமக்கு இருக்கிறார். நீங்களாவது கடந்த 5 வருஷம்தான் டென்ஷனாக இருந்தீர்கள். ஆனால், நாங்கள் தினம் தினம் டென்ஷனாக இருக்கிறோம்; எவ்வளவு சின்ன விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு அப்படியொரு பயம் இருக்கிறது,” என்று மிகவும் எதார்த்தமாகப் பதிலளித்தார்.
“புஸ்ஸி ஆனந்த் எப்போதும் பிசி ஆனந்த்!” – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்:
அமைச்சரின் இந்தப் பதிலைத் தொடர்ந்து மீண்டும் பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் எப்போதும் ‘பிசி’ (Busy) ஆனந்தாகவே வலம் வருகிறார்… அனைத்துக் கட்சித் தொண்டர்களும் அவரைத்தான் பார்த்து வருகின்றனர். உங்களுடையது புதிதாக வந்த இயக்கம்.. இனிமேல்தான் உங்களுக்கு எல்லாமே முழுமையாகத் தெரியப்போகிறது. வெளியிலிருந்து பேசுவது என்பது மிகவும் எளிது; ஆனால், அதைச் செயல்படுத்தும்போதுதான் அதிலிருக்கும் கஷ்டங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியும்,” என்று சிரித்துக்கொண்டே பேசினார்.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற இந்தச் சுவாரஸ்யமான உரையாடலால் சட்டப்பேரவை அவையில் சிறிது நேரம் பெரும் கலகலப்பு நிலவியது.
#MRKPanneerselvam #MinisterAnand #BussyAnand #ChiefMinisterVijay #ThalapathyVijay #TVKGovernment #TNAssembly #TamilNaduNews #TNPolitics #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates