இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சுகாதாரம் மற்றும் ஊடகத்துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் கலந்துரையாடியுள்ளன.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் ஆகியோருக்கு இடையிலான இந்தச் சந்திப்பு நேற்று முன்தினம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றுள்ளது.
இரு நாடுகளினதும் சுகாதாரக் கட்டமைப்புகளுக்கு இடையில் அறிவு, அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், சுகாதாரத்துறை பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை விநியோகிப்பதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தும் வகையில், ஊடகத்துறையில் அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் மாலைதீவுக்கு 5 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்கியமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு மாலைதீவு உயர்ஸ்தானிகர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.