2023-ஆம் ஆண்டு ஒன்ராறியோவின் நயாகரா ஃபால்ஸில் (Niagara Falls) வீடு ஒன்றை இடிக்கும் போது கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எச்சங்களை நயாகரா கொலைக் குற்றப் பிரிவு புலனாய்வாளர்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
விரிவான புலனாய்வு மற்றும் மரபணு வழியியல் தொழில்நுட்பத்தின் (Investigative Genetic Genealogy – IGG) உதவியுடன், இடிப்பு இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் பிரெண்டா மேரி லெப்லாங்க் (Brenda Marie Leblanc) என்பவருடையது என்பதை நயாகரா பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
1990-களின் பாதியில் தனது 30-வது வயதில் கடைசியாகக் காணப்பட்ட லெப்லாங்க், நியூ பிரன்சுவிக் (New Brunswick) மாகாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றும், நயாகரா ஃபால்ஸ் மற்றும் செயிண்ட் கேத்தரினேஸில் (St. Catharines) வசித்து வந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது மரணம் தற்போது கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
லெப்லாங்க் பற்றிய தகவல்கள் ஏதேனும் இருந்தால் வழங்குமாறு பொலிஸார் தற்போது பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“பிரெண்டாவை யாரோ ஒருவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். அவர் யாருடன் இருந்தார், எங்கே வசித்தார் அல்லது அந்த நேரத்தில் முக்கியமற்றதாகத் தோன்றிய ஏதேனும் ஒரு விஷயம் ஒருவருக்கு நினைவிருக்கலாம்,” என்று ஆய்வாளர் ஆண்ட்ரூ க்னீவெல் (Insp. Andrew Knevel) சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளியில் தெரிவித்துள்ளார்.
“உங்களிடம் சிறிய அளவிலான தகவல் இருந்தாலும், தயவுசெய்து நயாகரா பிராந்திய பொலிஸ் சேவையின் கொலைக் குற்றப் பிரிவைத் தொடர்பு கொள்ளவும். நீங்கள் தரும் தகவல் பிரெண்டாவின் குடும்பத்திற்கு இறுதியாக பதில்களை வழங்குவதற்கும், அவரது மரணத்திற்குக் காரணமான நபர் அல்லது நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் விடுபட்ட ஒரு முக்கிய இணைப்பாக இருக்கலாம்.”