அறிமுக நடிகர் ஸ்ரீ ஆதவ் கதையின் நாயகனாக – முன்கோபம் கொண்ட கிராமத்து இளைஞனாக – நடித்திருக்கும் ‘கோரைக்காரன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் எம். ஏ. ஸ்ரீ ஆதவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கோரைக்காரன்’ திரைப்படத்தில் ஸ்ரீ ஆதவ், வெண்மதி ஸ்ரீ ஆதவ், ‘திருப்பாச்சி’ பெஞ்சமின், மணிமாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. சீனிவாசன்- எஸ். தர்வேஷ் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மு. பாலசுப்பிரமணி இசையமைத்திருக்கிறார்.
உண்மை சம்பவத்தை தழுவி கிராமத்துப் பின்னணியிலான பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ பென்னாச்சி அம்மன் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீ ஆதவ் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி ஸ்ரீ ஆதவ் பேசுகையில், ” கதையின் நாயகன் கிராமிய வாழ்க்கையில் வாழ்ந்து வரும் முன் கோபக்கார இளைஞன்.
தான் நேசிக்கும் பெண்ணிற்காக தன்னை மாற்றிக் கொள்கிறான். ஆனால் அவனது பிடிவாத குணமும், அநீதிக்கு எதிரான போராட்டமும்… அந்த ஊர் தலைவருக்கு எதிராக தடம் மாறுகிறது. அதற்குப் பின் என்ன நடக்கிறது? என்பதை உண்மை சம்பவத்தை தழுவி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் – கிராமிய மக்களின் வாழ்வியல் முறையுடன் இருப்பதால்.. ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.