சமூகம் திறமையான மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தேவையான ஊக்கத்தை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படும் “தேசிய கியூ.ஆர் கொடுப்பனவு விழிப்புணர்வு திட்டத்தை” ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சமூகத்தில் நிலவும் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமாயின், நாடாக நாம் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களுக்குள் நுழைய வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். முறைசாரா பொருளாதாரத்தை முறைசார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதே தமது நோக்கம் எனவும், டிஜிட்டல் மயமாக்கல் மூலம் 15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கியூ.ஆர் குறியீடு என்பது முன்னர் எரிபொருள் கட்டுப்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதால், அது ஒரு கட்டுப்பாட்டுக் கருவி என்ற பொதுவான பிம்பம் மக்களிடையே உள்ளது. அந்தத் தடையை உடைக்க விசேட கல்வித் திட்டங்கள் அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்வரும் புத்தாண்டு கால கொடுக்கல் வாங்கல்களை கியூ.ஆர் குறியீடுகள் ஊடாக மேற்கொள்ள மக்களை ஊக்குவிக்குமாறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.