டுபாயில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரான படோவிட்ட அசங்கவின் உதவியாளரான தெஹிவளை டூ டோன் என்பவர் 3 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் அறிவுறுத்தலின் பேரில், பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்கவின் வழிநடத்தலில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சஞ்சீவ பெர்னாண்டோ எனப்படும் டூ டோன் என்றழைக்கப்படும் 49 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்ட போது, 4.5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட 3 கிலோ 150 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இரத்மலானையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடு ஒன்றில் இந்த போதைப்பொருட்களைக் களஞ்சியப்படுத்தி வைத்து, அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கத் தயாராக இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், இவ்வாறான சுற்றிவளைப்புகளின் போது தப்பிச் செல்வதற்கும், அதிகாரிகளை ஏமாற்றி சட்டப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்த சந்தேகநபர் முறையான பயிற்சி பெற்றவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளதுடன், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.