திறைசேரியினால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களுக்கு (Hacker) வழங்கப்பட்டமையானது அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் என துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மத்தள சர்வதேச விமான நிலையத்தில், வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை விமான சேவை நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தச் செயல்பாட்டில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அதிகாரிகள் குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஏனைய தரப்பினர் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர கருணாதிலக மேலும் கூறினார்.
“இதில் அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்பாடு தெளிவாகக் காணப்படுகிறது. அந்த அதிகாரிகளுக்கு எதிராகத் தேவையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் கிடைக்கப்பெறும் விசாரணை முடிவுகளுக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.