திருத்தணி
ஆடி கிருத்திகை பெருவிழாவை முன்னிட்டுப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவியும் திருத்தணி முருகன் கோவிலில், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், தற்போதைய திமுக எம்.எல்.ஏ.வுமான பி.கே. சேகர்பாபுவின் கார் மலை அடிவாரத்தில் போலீசாரால் அதிரடியாகத் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வந்த சேகர்பாபுவின் காரை, பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மலை அடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தினர். தன்னிடம் உரிய ‘கார் பாஸ்’ இருப்பதையும், தான் ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ. என்பதையும் சுட்டிக்காட்டி மலைக்கு மேலே செல்ல அனுமதிக்குமாறு சேகர்பாபு வலியுறுத்தியுள்ளார். ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அனுமதி அளித்தால் மட்டுமே வாகனத்தை அனுமதிக்க முடியும் எனப் போலீசார் கறாராகக் கூறியதால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.
கார் பாஸ் வைத்திருந்த மற்ற வாகனங்கள் அனைத்தும் தடையின்றி அனுமதிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய வாகனம் மட்டும் திட்டமிட்டு நிறுத்தப்பட்டதாகச் சேகர்பாபு தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. கோவில் அறங்காவலர்கள் தலையிட்டு எடுத்துக் கூறியும் போலீசார் உடனடியாக அனுமதி வழங்கவில்லை. சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலான பரபரப்பான காத்திருப்புக்குப் பிறகு, மாவட்ட எஸ்.பி. சாய் பிரணீத் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து சேகர்பாபுவின் வாகனம் மலைக்கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்தத் திடீர் சம்பவத்தால் திருத்தணி அடிவாரத்தில் பெரும் பதற்றம் நிலவியது!
#TiruttaniMuruganTemple #PKSekarBabu #AadiKrithigai #TNPolice #DMK #TamilNaduPolitics #TNPolitics #ViralNews #TamilNews #Tiruttani #LatestNewsTN #TrendingTN #PoliticalUpdatesTN #TempleFestival