சென்னை:
திருத்தணியில் சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் கிளிங்கர் அரவை ஆலை அமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார். இல்லையென்றால் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் விரிவான பதிவை வெளியிட்டுள்ளார்.
ரூ.838 கோடியில் கிளிங்கர் அரவை ஆலை:
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கார்த்திகேயபுரம் ஊராட்சியில் ஏறத்தாழ 838 கோடி ரூபாய் முதலீட்டில், ஆண்டுக்கு 35 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கிளிங்கர் அரவை ஆலையை அமைத்து, அப்பகுதியின் சுற்றுச்சூழலைச் சீரழிக்கத் தமிழ்நாடு அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் இத்தகைய தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முன்னதாக, மக்களின் நலன், நீர்வளம், விவசாயம், எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வாதாரம் ஆகியவை குறித்து முழுமையான மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அப்பகுதி மக்களின் கருத்தைக் கேட்க வேண்டியதும் மிகவும் இன்றியமையாதது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும்:
கிளிங்கர் அரவை ஆலையில் கிளிங்கர் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்ற காரணத்தைக் காட்டி, சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் புறக்கணித்துவிட முடியாது. மூலப்பொருட்களைக் கையாளுதல், சிமெண்ட் அரவை, தூசு பரவல், கனரக வாகனப் போக்குவரத்து, ஒலி மாசு, நீர்வளப் பயன்பாடு ஆகியவற்றால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்விடங்களும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் சாடியுள்ளார்.
மக்கள் திரள் போராட்டம்:
மக்களின் கருத்துகளையும் எதிர்ப்புகளையும் மதிக்காமல் எந்தவொரு திட்டத்தையும் திணிப்பது மக்களாட்சி நெறிமுறைகளுக்கு எதிரானது. நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு நாட்டு மக்களின் வாழ்வுரிமையைவிடத் தனியார் நிறுவனங்களின் லாப நோக்கம் முதன்மையானது அல்ல. சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது எப்படி மக்களின் கடமையோ, அதைப்போலவே இயற்கையைப் பாதுகாப்பதும், மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதும் அரசின் முதன்மைக் கடமை. சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் எந்தவொரு திட்டத்திற்கும் அரசு அனுமதியளிக்கக் கூடாது. எனவே, தமிழ்நாடு அரசு மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, கார்த்திகேயபுரம் ஊராட்சியில் கிளிங்கர் அரவை ஆலை அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால், மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்று சீமான் எச்சரித்துள்ளார்.
#Seeman #NTK #Tiruttani #ClinkerPlant #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive