சென்னை:
பொதுப்பணித்துறை அமைச்சரும் தவெக நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, திமுக மேடையில் முதலமைச்சர் விஜய் குறித்து அநாகரீகமாகப் பேசப்பட்டதற்குத் தனது எக்ஸ் தளப் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளாக இருந்த மேடைகள்:
அரசியல் மேடைகள் தந்தை பெரியார் காலத்தில் பகுத்தறிவைக் கற்பிக்கும் பள்ளிகளாக இருந்தன. அறிஞர் அண்ணா காலத்தில் அரசியல் அறிவை வளர்க்கும் பல்கலைக்கழகங்களாக இருந்தன. ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் திமுகவின் தற்போதைய மேடைகள், அவதூறு கருத்துகளை மட்டுமே பரப்பும் மேடைகளாக மாறிவிட்டன. 2026 சட்டமன்றத் தேர்தலில் தோற்ற திமுக, தன் ஆற்றாமையையும் காழ்ப்புணர்வையும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படுத்துகிறது என்று அவர் சாடியுள்ளார்.
மேயர் ரசிப்பு, கனிமொழி மௌனம்:
சென்னையில் திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பெண் பேச்சாளர் ஒருவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மிகவும் தரக்குறைவான முறையில் விமர்சித்தார். அதை மேடையில் இருந்த சென்னை மேயர் பிரியா கைகொட்டிச் சிரித்து ரசித்தார். திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி அந்தப் பேச்சாளரைக் கண்டிக்காமல் தலைகுனிந்து மௌனமாக இருந்தார். சொந்தக் கட்சியினர் பேச்சுகளைக் கேட்க முடியாமல் கனிமொழி தலைகுனியும் அளவுக்குத்தான் இன்றைய திமுக மேடைகளின் தராதரம் இருக்கிறது. இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். அந்தப் பெண் பேச்சாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகமும் ஆரோக்கியமான அரசியலும் வலுப்பெறும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
விஜய் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முடியாது:
நாகரீக அரசியல், பண்பான அரசியல் என்று வார்த்தைகளில் மட்டும் பேசும் மு.க.ஸ்டாலின், இவற்றைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற அவதூறுகளால், தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக உருவாகியுள்ள விஜய்யின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த முடியாது. பெரியாரின் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதிக் கருத்துகளையும், அண்ணா வகுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற இலக்கணத்தையும் திமுகவினர் மறந்துவிட்டனர். அழகிய தமிழின் அடுக்குமொழிகளால் கட்சியை வளர்த்த திமுகவினர் இன்று அசிங்கமான பேச்சுகளுக்குள் முடங்கிப் போயுள்ளனர். இத்தகைய அவதூறுகளைக் கடந்துதான் ஜோசப் விஜய் தமிழக மக்களின் மனங்களில் நிரந்தர வெற்றியைப் பெற்றுள்ளார் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
#AadhavArjuna #TVK #DMK #CMVijay #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive