மதுரை:
தமிழகத்தில் தவெக ஆட்சி விரைவில் கவிழப்போகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இவரது இந்தப் பேட்டி தற்போது அரசியல் களத்தில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மேயர் கைது:
குதிரை பேர விவகாரத்தில் சிக்கிய முன்னாள் மேயர் பி.எம்.மன்னனை, மதுரை மத்திய குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸ் அலுவலகத்திற்குச் சென்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, “மத்திய குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் மன்னனைக் கைது செய்துள்ளனர். என்னையும் உள்ளே வைத்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. முஸ்தபாவும் மன்னனும் மாமன் மைத்துனன் என்ற அடிப்படையில் நெருங்கிய நண்பர்களாகப் பேசியுள்ளனர். தவெக நிர்வாகிகள் கட்சிப் பதவிக்குப் பணம் வாங்குவதாக ரீல்ஸ் வருகிறதே என முஸ்தபாவிடம் மன்னன் பேசியுள்ளார்,” என்று அவர் கூறினார்.
பொய் வழக்கு:
தொடர்ந்து அவர், “மன்னன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குதிரை பேரத்தினால்தான் தவெக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு எதுவும் செய்யாத மாபெரும் அரசாக உள்ளது. பணம் கொடுத்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குக் கடுகளவும் இல்லை. நாங்கள் எப்போதும் மக்களைச் சந்திப்போம். குறுக்குவழியில் ஆட்சியமைக்க அவசியமில்லை. விரைவில் இந்த ஆட்சியே கவிழப்போகிறது. முஸ்தபா ஒன்றும் யோக்கியர் அல்ல, அரிச்சந்திரனும் கிடையாது. அவர் கவுன்சிலர் சீட்டுக்குப் பணம் கேட்டவர். தமிழகத்தில் விலைவாசி உயர்வை மறைக்கவே இதுபோன்ற விஷயங்களைக் கிளப்பி விடுகிறார்கள். மன்னன் மீதான இந்தக் கைது நடவடிக்கையை அதிமுக சார்பில் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்,” என்று அவர் சாடியுள்ளார்.
சம்மனுக்கு முன்பே கைது:
மேலும், “இந்த விவகாரம் தொடர்பாக, மன்னனுக்கு 7-ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனச் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதற்குள் அவரை அவசர அவசரமாகக் கைது செய்துவிட்டார்கள். தவெகவினர் போல் அவர் போதைப்பொருள் விற்பவரல்ல. அவர் இப்போதுதான் அதிமுகவில் சேர்ந்தார். அவரை வைத்து இப்படிச் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மவுன முதலமைச்சர் விஜய்தான் உள்ளாரே தவிர அரசு திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மக்கள் இந்த ஆட்சியை உறுதியாகத் தூக்கி எறிவார்கள். உள்ளாட்சித் தேர்தல் முடிவே இதற்கு மாபெரும் சாட்சியாக இருக்கும்,” என்று செல்லூர் ராஜூ தனது பேட்டியில் ஆவேசமாகத் தெரிவித்தார்.
#SellurRaju #AIADMK #PMMannan #TVK #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive