சென்னை
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை (ஆகஸ்ட் 8) கூட்டியுள்ள எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா என்பது குறித்து, கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் அதிரடியான விளக்கங்களை அளித்துள்ளனர்.
பிறக்காத குழந்தைக்குப் பெயர் வைப்பதா?
செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “தொகுதி மறுசீரமைப்பு மசோதா இன்னும் நாடாளுமன்றத்திற்கே வரவில்லை. இதற்கான கால அவகாசமும் வரையறுக்கப்படவில்லை. தொகுதி மறுசீரமைப்பு என்பது பிறக்காத குழந்தை; குழந்தை பிறந்த பிறகுதான் அது ஆணா, பெண்ணா எனப் பார்த்துப் பெயர் வைக்க முடியும். நாங்கள் எல்லாம் குழந்தை பெற்றவர்கள், இதை இப்படித்தான் பார்க்க முடியும். மசோதா வந்து, அதில் உள்ள திருத்தங்களைப் பார்த்த பிறகு, எம்.பி.க்களோடு ஆலோசித்து எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய முடிவை எடுப்பார். இதில் தென்மாநிலங்களுக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்பதில் திமுக மிகவும் உறுதியாக உள்ளது” என்று தெரிவித்தார்.
காவிரியைத் திசை திருப்பும் நாடகம்:
தொடர்ந்து பேசிய அவர், “தற்போதுள்ள முக்கியப் பிரச்சனை மேகதாது விவகாரம்தான். குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாமல் தமிழ்நாட்டு மக்கள் தாகத்தில் தவிக்கிறார்கள். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெளிவாகப் பேசி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தியுள்ளார். ஆனால், காவிரிப் பிரச்சனையைத் திசை திருப்புவதற்காகவே தமிழ்நாடு முதலமைச்சர் எம்.பி.க்கள் கூட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார். இதில் பங்கேற்பதா, வேண்டாமா என்பதை மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்” எனக் கடுமையாகச் சாடினார்.
பட்ஜெட் ஒரு பொய் – டி.கே.எஸ்.இளங்கோவன் சாடல்:
திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், “காவிரி விவகாரத்தைத் திசை திருப்பவே எம்.பி.க்கள் கூட்டத்தைத் தவெக அரசாங்கம் கூட்டுகிறது. தவெக தலைமையிலான அரசின் பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை; வெறும் பொய்தான் உள்ளது. திமுக ஆட்சியில் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு ரூ.8,000 நிவாரணம் வழங்கப்பட்டது. அதனை ரூ.20,000 ஆக உயர்த்துவோம் எனக் கூறிய முதலமைச்சர் விஜய், தற்போது அதை ரூ.7,000 ஆகக் குறைத்துவிட்டார்! திமுக அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றியுள்ளார்களே தவிர, பட்ஜெட்டில் உருப்படியான அறிவிப்பு என்று எதுவுமே இல்லை” என்று சரமாரியாக விமர்சித்தார்.
#DMK #RSBharathi #TKSElangovan #TVKGovernment #ThalapathyVijay #DelimitationBill #TNMPsMeeting #MekedatuIssue #CauveryIssue #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNews #LatestNewsTN #TrendingTN #PoliticalUpdatesTN #AnnaArivalayam