மதுரை:
தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பதவிக்காக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் ஆடியோவில் ரூ.15 லட்சம்:
தவெகவில் புதிதாக மதுரை மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட, பகுதி மற்றும் வட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபாவின் உதவியாளர் கனி என்பவர் கட்சிப் பதவிக்காக ரூ.15 லட்சம் கேட்பதாகக் கூறப்படும் ஆடியோ வெளியானது. இது குறித்து அமைச்சர் நிர்மல்குமார், தனது கவனத்திற்குப் புகார் வரவில்லை, புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
எம்எல்ஏ மீது நேரடிக் குற்றச்சாட்டு:
தற்போது வெளியான இரண்டாவது ஆடியோவில் பேசும் மதுரையைச் சேர்ந்த ஜோயல், கட்சிக்குள் பகிர்ந்துகொண்ட பதிவு பொதுவெளிக்கு வந்துவிட்டது. இதனால் நட்பும், உறவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எனது பணத்தைச் செலவிடத் தயாராக இருந்தாலும், மற்றவர்களின் பணத்தைப் பெற விரும்பவில்லை. மதுரையில் பணத்தை மையமாகக் கொண்டு அரசியல் நடைபெறுகிறது. கட்சிப் பதவிக்காக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதாக எனக்குத் தகவல் வந்துள்ளது. பணம் கொடுத்துத்தான் பதவி பெற்றதாகக் கூறப்படும் நிலை வெட்கக்கேடானது. இந்த விவகாரத்தில் எம்எல்ஏ முஸ்தபாவுக்குத் தொடர்பு உள்ளது. பதவிகளுக்குப் பணம் தொடர்பான பேச்சுகள் எழுந்தபோதே அவர் அவற்றைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு எம்எல்ஏ முஸ்தபாவே காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
100 ஆடியோ, வீடியோ ஆதாரங்கள்:
பணம் கட்டுக்கட்டாகக் கைமாறியது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் பாதுகாப்பாக உள்ளன. என்னிடம் 100 ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் உள்ளன. தேவைப்பட்டால் அவற்றைத் தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளரிடமோ, மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்திலோ ஒப்படைக்கத் தயாராக இருக்கிறேன். ஊழலை ஒழிப்பதற்காக அரசியலுக்கு வந்ததாக முதலமைச்சர் விஜய் கூறியிருக்கும் நிலையில், கட்சிக்குள் இத்தகைய பணப்பரிமாற்றப் புகார்கள் எழுவது ஏன்? என்று ஜோயல் கேள்வி எழுப்பியுள்ளார். புகார்கள் குறித்துக் கட்சித் தலைமை விசாரணை நடத்துமா, காவல்துறையிடம் புகார் அளிக்கப்படுமா, எம்எல்ஏ முஸ்தபா தரப்பில் என்ன விளக்கம் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
#TVK #Madurai #MLAMustafa #ViralAudio #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive