சென்னை:
தவெகவினர் தமிழ்நாட்டையே சூறையாடிக் கொண்டிருப்பதாகவும், மாநிலத்தில் யாருக்கும் துளியும் பாதுகாப்பு இல்லை என்றும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி கனிமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும்போது, அரசாங்கத்தில் இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் கொலைச் சம்பவங்களைச் சாதாரண விஷயத்தைப் போலப் பேசுகிறார். இது மிகவும் வருத்தமளிக்கிறது. குற்றச் சம்பவங்களைக் குறித்து அதனைச் சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு இல்லை. எதையாவது ஒரு காரணத்தைச் சொல்லித் தங்களை எவ்வாறு நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது முக்கியக் குறிக்கோளாக உள்ளது. ஆட்சிக்கு வந்தபின் அனைத்தையும் கற்றுக்கொள்ள ஆறு மாத காலம் அவகாசம் கேட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்களுக்கு ஆபத்தான விஷயங்களைத்தான் அவர்கள் கற்றுக்கொண்டுள்ளார்கள். ஏனென்றால் பல குற்றங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்,” என்று அவர் சரமாரியாகச் சாடினார்.
அதிகார துஷ்பிரயோகம்:
தொடர்ந்து அவர், “பொதுப் பிரச்சனைகளைக் கோரிக்கை வைப்பதற்காகத் துணை சபாநாயகர் வீட்டிற்குச் சென்றவரைத் தாக்கி, அவரை மிரட்டி, தங்களுக்குச் சாதகமான வீடியோ ஒன்றைப் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். தவெகவினரால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரும்போது, அந்த வழக்கை மிரட்டி வாபஸ் பெறச் செய்யக்கூடிய மோசமான சூழல் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. தொடர்ந்து இதுபோன்று தவெகவினரை எதிர்த்துக் குற்றம் சுமத்துபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் அல்லது மிரட்டப்படுகிறார்கள்,” என்று ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.
ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை:
மேலும் அவர் கூறுகையில், “ஒரு மாவட்ட ஆட்சியருக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. இவ்வளவு நாட்கள் இல்லாமல் ஒரு மாவட்ட ஆட்சியருக்குப் புதிதாக ஒரு காவல் அலுவலரை நியமித்துப் பாதுகாப்பு கொடுப்பதற்கான அவசியம் என்ன? இந்த விவகாரத்திற்கும் தவெகவினர் திரைக்கதை எழுதி ஏதாவது வசனங்களைச் சொல்வார்கள். தவெக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும், குற்றங்கள் நடக்காது, ராணுவக் கட்டுப்பாட்டில் நாட்டை வைத்திருப்பேன் என்றும் முதலமைச்சர் விஜய் சொன்னார். ஆனால், தவெகவினர் தற்பொழுது தமிழ்நாட்டையே சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என யாருக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகிறது. ஆளுங்கட்சியினர் இனிமேலாவது கொஞ்சம் பொறுப்புடன் செயல்பட வேண்டும்,” என்று கனிமொழி எம்.பி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.