கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகச் சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களுக்குத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார். மேலும் தன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மறுப்பு விளக்கம்:
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அவரிடம் கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார். அவர் கூறுகையில், “அதிகாரிகள் மீது எனக்குப் பெரிய அளவிலான மதிப்பும் மரியாதையும் உள்ளது. நான் யாருக்கும் எத்தகைய தவறான குறுஞ்செய்தியையும் அனுப்பவில்லை. தவறான கருத்தை ஏன் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் நான் தவறாமல் பங்கேற்று வருகிறேன். சில நிகழ்ச்சிகள் நடைபெறும் போது நான் சென்னையில் இருந்ததால் அவற்றில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் ஆட்சியருக்குப் பயந்து அரசு விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் கிடையாது,” என்று கூறினார்.
அரசியல் வன்மம்:
தொடர்ந்து அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே தவெக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ நான் ஒருவன் தான். இதனால் என் மீது வன்மம் அதிகமாக உள்ளது. என்னை டேமேஜ் செய்ய வேண்டும் என்பதற்காகவே சமூக வலைதளங்களில் தவறாகப் பதிவிட்டு வருகிறார்கள். மக்கள் தான் உண்மையான சக்தி; மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். நான் ஒருபோதும் இதுபோன்ற தவறைச் செய்ய மாட்டேன். அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை,” என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
சவால் மற்றும் எச்சரிக்கை:
மேலும், “நான் தவறாகக் குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை என்றால் என் மீது எந்தவிதமான நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கட்டும். தேவையில்லாமல் அவதூறுகளைப் பரப்புகிறார்கள். அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் தான் நான் முன்பே விளக்கம் கொடுக்கவில்லை. என் பெயரையும், கட்சிப் பெயரையும் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர், கணினி முன்பு அமர்ந்துகொண்டு இதுபோன்ற கேவலமான வேலையைச் செய்து வருகின்றனர். அவர்கள் மீது நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்,” என்று அருள் விக்னேஷ் ஆவேசமாகத் தெரிவித்தார்.