கனடியப் பொருட்கள் மீது புதிய வரிகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையானது, “கனடா சில மாற்றங்களைச் செய்வதற்கான விழிப்புணர்வாக (wake-up call)” இருக்க வேண்டும் என ஐயோவா செனட்டர் சக் கிராஸ்லி (Chuck Grassley) தெரிவித்துள்ளார்.
டெஸ் மொய்ன்ஸில் (Des Moines) நடைபெற்ற ஐயோவா மாநிலக் கண்காட்சியில் தி கனடியன் பிரஸ்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில், “அதிபர் இந்த வரி எச்சரிக்கையை ஒரு அழுத்தக் கருவியாகப் பயன்படுத்துகிறார் என்று நான் நினைக்கிறேன்” என கிராஸ்லி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளித்து வரும் மூத்த குடியரசுக் கட்சி உறுப்பினரான கிராஸ்லி, அதிபரின் அதிகரித்து வரும் வரி நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் சுதந்திர வர்த்தகத்திற்கான தனது ஆதரவைத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடுமையான பேச்சுவார்த்தைகள் நடப்பதில் தவறு எதுவுமில்லை என்றும், ஆனால் அவை CUSMA (கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தம்) எனப்படும் முத்தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தைச் சீர்குலைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “இந்தப் பேச்சுவார்த்தைகள் CUSMA ஒப்பந்தத்தை அழிக்கும் வழிகளாகப் பயன்படுத்தப்படக் கூடாது” என்றும் கிராஸ்லி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 19 முதல் பல கனடியப் பொருட்கள் மீது 50 சதவீத வரியை விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையொப்பமிட்டதைத் தொடர்ந்து, கனடிய அதிகாரிகள் தங்கள் அமெரிக்க அதிகாரிகளுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க மதுபானங்களுக்கான மாகாணத் தடைகள், கனடாவின் பால் விநியோக மேலாண்மை முறை மற்றும் சில அமெரிக்க வாகனங்களுக்கான ஒதுக்கீடுகள் (quotas) ஆகியவற்றிற்குப் பதிலடியாகவே இந்த புதிய வரிகள் விதிக்கப்படுவதாக ட்ரம்ப் நிர்வாகம் கூறுகிறது.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை ஐயோவா மாநிலக் கண்காட்சியில் கலந்துகொண்ட அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜாமிசன் க்ரீயர் (Jamieson Greer), கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் “ஆக்கப்பூர்வமாக” இருந்ததாகக் கூறிய போதிலும், புதிய வரிகள் அமலுக்கு வருவதற்கு முன் ஒப்பந்தம் எட்டப்படும் என்பதற்கான எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தவில்லை.
ட்ரம்ப்பின் பெரும்பாலான பிற வரி விதிப்புகளைப் போல் அல்லாமல், இந்த புதிய வரிகள் வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமைவாக இருக்கும் பொருட்களுக்கும் எந்தவித விலக்கையும் வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது