ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர்ச் சூழலைக் குறிப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதி; டொனால்ட் ட்ரம்பின் செயல்பாடுகளை கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலகையே ஆள வேண்டும் என்ற ஒரு மனிதனின் சுயநலத்தால் இன்று அனைத்து நாடுகளும் அவதிப்பட்டு வருவதாக கர்தினால் தெரிவித்தார். “உலகின் மிக முக்கியமான நாட்டின் தலைவராக இருக்கும் இவர் அண்டை நாடுகளின் மீது குண்டுகளை வீசி பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறார்” என்று அவர் குறிப்பிட்டார்.
“அவர் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று அழைத்துக்கொள்கிறார். ஆனால் தற்போது அவர் செய்துகொண்டிருக்கும் காரியங்களை ஒரு கிறிஸ்தவரால் செய்ய முடியாது. இவரைப் போன்றவர்களை கிறிஸ்தவர்கள் என்று அழைக்க முடியாது” என கர்தினால் மல்கம் ரஞ்சித் சாடினார்.
தலைமைத்துவம் குறித்த பாடம்: கிறிஸ்தவக் கொள்கைகளின்படி உண்மையான தலைவர்கள் மக்களுக்குச் சேவை செய்பவர்களாக இருக்க வேண்டும். ஒரு தலைவர் அதிகாரத்தின் பின்னால் ஓடக்கூடாது என்றும் அன்பு மற்றும் மற்றவர்களின் நலனுக்காகவே உழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“அடோல்ப் ஹிட்லர் ஐரோப்பாவின் உச்சகட்டத் தலைவராக மாற முயன்றார். இறுதியில் அவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கர்தினால் கேள்வி எழுப்பினார்.
இலங்கை கத்தோலிக்கப் பக்தர்கள் அனைவரும் அமைதிக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்ட கர்தினால் “அதிகாரப் பசி கொண்ட இந்தத் தலைவரின் மனதை மாற்றுமாறு இறைவனிடம் வேண்டுவோம்” என்றும் அழைப்பு விடுத்தார்.
ஈஸ்டர் விழிப்பு வழிபாட்டின் போது கர்தினால் ஆற்றிய இந்த உரை தற்போதைய சர்வதேச அரசியல் மற்றும் போர்ச் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.