இந்த மாத தொடக்கத்தில் நபர் ஒருவரைக் காரணமின்றித் தாக்கி, பலத்த காயங்களை ஏற்படுத்திய கொள்ளைச் சம்பவம் தொடர்பாக டொராண்டோவைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டொராண்டோ போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, கடந்த ஜூன் 12 ஆம் தேதி மாலை 5 மணியளவில் டண்டாஸ் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Dundas Street East) மற்றும் பிராட்வியூ அவென்யூ (Broadview Avenue) பகுதியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் தனது வாகனத்திலிருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சந்தேக நபர் எவ்வித தூண்டுதலோ காரணமோ இன்றி அவரைத் தாக்கி, அவரிடமிருந்த பொருட்களைக் கொள்ளையடித்துள்ளதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த பாதிக்கப்பட்ட நபர், உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று (ஜூன் 20) டொராண்டோவைச் சேர்ந்த ஜெஃபர்சன் ஹென்றி (Jefferson Henry – 44) என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொள்ளை (robbery), கடுமையான தாக்குதல் (aggravated assault) மற்றும் நன்னடத்தை விதியை மீறியமைக்கான இரண்டு குற்றச்சாட்டுகள் (breach of probation) சுமத்தப்பட்டுள்ளன. சந்தேக நபர் ஜூன் 21 அன்று ஒன்டாரியோ நீதிமன்றத்தில் (Ontario Court of Justice) ஆஜர்படுத்தப்படவிருந்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.