வியாழக்கிழமை மாலை டொரண்டோ நகரின் மையப்பகுதியில் (Downtown Toronto) அமைந்துள்ள வணிகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாகப் பல வீதிகள் மூடப்பட்டன.
மாலை 6:30 மணிக்குச் சற்று முன்பாக, ரிச்மண்ட் வீதி மேற்கில் உள்ள 304 ஆம் இலக்கக் கட்டிடத்தில் (304 Richmond Street West) தீ விபத்து ஏற்பட்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து அவசரக்கால மீட்புக் குழுவினர் அழைக்கப்பட்டனர்.
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது கடுமையான தீப்பற்றி எரிந்ததோடும், அடர்ந்த புகையும் காணப்பட்டதாக டொரண்டோ தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர். கட்டிடத்தின் கூரைப் பகுதியிலேயே இத்தீ விபத்துத் தொடங்கியதாகத் தெரிகிறது.
தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டு விட்டதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
டொரண்டோ காவல்துறையினர் சம்பவ இடத்தில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு, தீயணைப்பு வீரர்கள் தங்களது பணிகளைத் தொடர்வதால் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன.
ரிச்மண்ட் வீதி மேற்கில், டங்கன் வீதிக்கு மேற்கே செல்லும் பாதைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. அத்துடன் விட்மர் வீதி, அடிலெய்ட் வீதி மேற்கிற்கு வடக்கேயும், ஜான் வீதி, அடிலெய்ட் வீதி மேற்கிற்கும் குயின் வீதி மேற்கிற்கும் இடைப்பட்ட பகுதியிலும் மூடப்பட்டுள்ளன.